×

அதிமுகவில் உட்கட்சி தேர்தல்; பணம் கட்ட விடாமல் தடுத்ததால் ஓ.எஸ். மணியன் காரை மறித்து தர்ணா

விழுப்புரம்: அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நேற்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் நடைபெற்றது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நகர செயலாளர்களுக்கான உட்கட்சி தேர்தல் நேற்று நடந்தது. தேர்தல் பொறுப்பாளராக நாகை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கோலியனூர் ஒன்றியத்தை சேர்ந்த பொருளாளர் அன்பழகன் தனது பதவிக்கு, மீண்டும் பணம் கட்ட சென்றுள்ளார். அப்போது அவரை பணம் கட்ட விடாமல் தடுத்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அதிமுக கட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். கட்சி அலுவலகத்திலிருந்து வெளியே வந்த தேர்தல் பொறுப்பாளர் ஓ.எஸ்.மணியன் காரை மறித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அன்பழகன் கூறுகையில், எம்ஜிஆர் கட்சி துவக்கியது முதல் நான் இருந்து வருகிறேன். ஜெயலலிதாவால் எனக்கு ஒன்றிய பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நான் மீண்டும் இந்த பதவிக்கு விண்ணப்பித்தேன். ஆனால், மாஜி அமைச்சர் சண்முகம் ஆதரவாளர்களை வைத்து வெளியே அப்புறப்படுத்தி விட்டார். அவரது ஆதரவாளர்கள் மட்டும் தேர்தலில் பணம் கட்ட அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மட்டும் பொறுப்பு வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக தேர்தல் பொறுப்பாளர் ஓ.எஸ்.மணியனிடம் சென்று முறையிட்ட போது அவர் கண்டுகொள்ளவில்லை என்றார். சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு அங்கு திரண்ட மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள்  அன்பழகனை அங்கிருந்து குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.


Tags : AIADMK ,OS ,Maniyan ,Dharna , AIADMK by-election; OS for refusing to pay Maniyan forgot the car and Dharna
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...